பதவி உயர்வை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி

மத்திய பிரதேசத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா செய்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் தங்களுடைய பதவி உயர்வு தொடர்பாக தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தங்கள் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காததால் பேராசிரியர்கள் தங்கள் பணியில் இருந்து விலகி வருகின்றனர். அந்தவகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் 6 மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேராசிரியர்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கி உள்ளனர்.

இதைப்போல பிற கல்லூரிகளில் பணியாற்றி வரும் மேலும் சுமார் 2,300 பேராசிரியர்களும் இன்றைக்குள் (வெள்ளிக்கிழமை) தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்குவார்கள் என மத்திய மருத்துவ பேராசிரியர் சங்கத்தின் மாநில செயலாளர் டாக்டர் ராகேஷ் மால்வியா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பேராசிரியர்கள் வருகிற 9-ந்தேதி முதல் மருத்துவப்பணிகளில் ஈடுபடமாட்டார்கள். எங்கள் பதவி உயர்வு தொடர்பாக தெளிவான கொள்கை ஒன்றை அரசு வகுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வருகிற 9-ந்தேதி முதல் மருத்துவப்பணிகளை மேற்கொள்ளமாட்டோம் என மருத்துவ பேராசிரியர்கள் அறிவித்து உள்ளதால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாவார்கள் என தெரிகிறது. ஏனெனில் மத்திய பிரதேசத்தில் உள்ள 13 அரசு மருத்துவக்கல்லூரிகளுடன் இணைந்து செயல்படும் மருத்துவமனைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளி கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் காந்தி மருத்துவக்கல்லூரியுடன் இயங்கி வரும் ஹமதியா மருத்துவமனை மட்டுமே நாள் ஒன்றுக்கு சுமார் 3,500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் 2 நாட்களில் ராஜினாமா செய்திருப்பது மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com