போபால்,
மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா கட்சியில் இருந்து விலகி கடந்த புதன்கிழமை பா.ஜனதாவில் சேர்ந்தார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் 3 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். பதவி விலகியவர்களில் 6 மந்திரிகள் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
போட்டி எம்.எல்.ஏ.க்கள் விலகியதால் அங்கு காங்கிரஸ் முதல்-மந்திரி கமல்நாத் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவினர் காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். ஆனால் இதனை பா.ஜனதா மறுத்துள்ளது.
இந்நிலையில் முதல்-மந்திரி கமல்நாத் நேற்று காலை 11 மணிக்கு கவர்னர் லால்ஜி தாண்டனை சந்தித்து பேசினார். அப்போது மாநிலத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து அவர் கவர்னரிடம் விளக்கினார். அதோடு பெங்களூருவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கவர்னரிடம் 3 பக்க கடிதம் ஒன்றை கமல்நாத் கொடுத்தார். அந்த கடிதத்தில், வருகிற 16-ந்தேதி தொடங்கும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். கடந்த 3-ந்தேதி இரவில் இருந்து 10-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்காக குதிரை பேரம் நடைபெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜனநாயகம் மிகவும் ஆபத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
கவர்னர் மாளிகையில் இருந்து வெளியில் வந்த கமல்நாத்திடம் நிருபர்கள், மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல்நாத், இங்கு அரசியலில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
கமல்நாத் கவர்னரை சந்தித்த அதேவேளையில், சிந்தியாவின் ஆதரவாளர்களான பெங்களூருவில் உள்ள 6 மந்திரிகளும் போபால் வந்து சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை உறுதி செய்ய அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.