மதுரை,
ராமநாதபுரத்தில் நடந்த மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசியதாவது:-
மத்திய மந்திரிசபை கூட்டத்தின் போது தமிழகத்தின் சிறப்புகளை பற்றி பிரதமர் மோடி பேசியிருக்கிறார். தமிழ் மொழி, தமிழ் வரலாறு, தமிழ் கலாசாரம் ஆகியவை மோடிக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்.
மோடி 2-வது முறையாக பிரதமாக பொறுப்பேற்ற போது 100 நாள் செயல்திட்டத்தை வடிவமைத்தார். அப்போது அவர், 2022-ம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது புதிய இந்தியா உருவாக வேண்டும் என்றார். அனைத்து குடிமக்களுக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். குழந்தைகளுக்கு சத்து குறைபாடு இருக்கக்கூடாது. பெண்கள், முதியவர்கள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும்.
அதனால்தான் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மோடி அனுமதி அளித்தார். அதில் 11 மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் கட்டப்படுகின்றன. இந்த 75 மருத்துவ கல்லூரிகளிலும் முதல் மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, ராமநாதபுரத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அனைத்து பணிகளையும் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செய்து கொடுத்தது. நாங்கள் கேட்ட தகவல்களை விரைவாக கொடுத்து மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மூல காரணமாக இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். நான் உங்களுக்கு உறுதி கூறுகிறேன், எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரம் வாய்ந்ததாக அமையும். அதற்கான பணிகளை மத்திய அரசு முன்னின்று செய்யும்.
தமிழகத்தில் ஏற்கனவே 26 அரசு மருத்துவ கல்லூரிகளும், 23 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. தற்போது கூடுதலாக 11 அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்படுகின்றன. அதன்மூலம் தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கும்.
ஏழைகளுக்கும் உலக தரம் வாய்ந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம். ஒவ்வொரு இந்தியருக்கும் தரமான மருத்துவ சிகிச்சை என்பது அவர்களின் அடிப்படை உரிமை. மருத்துவ வசதி கிடைப்பதில் ஏழைகள், பணக்காரர்கள் பாகுபாடு இருக்க கூடாது.
இந்தியாவிலேயே சுகாதார துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. அதற்கு காரணமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டுகிறேன். அனைவரும் நீண்ட வாழ்வு வாழ வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும். உங்கள் வாழ்க்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொண்டு உடல் நலத்தோடு இருக்க வேண்டும். மோடியின் ஆரோக்கிய இந்தியா திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நல்லதை சாப்பிடுங்கள், குறைவாக சாப்பிடுங்கள். உடல் பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.