மராட்டியத்தில் துணை முதல்-மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை கிடைக்க வாய்ப்பு

மராட்டியத்தில் மந்திரிகள் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
Published on

மும்பை,

மராட்டியத்தில் தேர்தலுக்கு பிந்தைய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி ஆட்சி அமைத்தது. அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், 3 கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

இந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த மாதம் 30-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 3 கட்சிகளை சேர்ந்த 36 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். தற்போது உத்தவ் தாக்கரே மந்திரி சபையில் அவரையும் சேர்த்து 43 மந்திரிகள் உள்ளனர்.

ஏற்கனவே 3 கட்சிகளுக்கும் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளன. அந்த இலாகாக்களை தொடக்கத்தில் பதவி ஏற்ற 3 கட்சிகளை சேர்ந்த 6 மந்திரிகள் கவனித்து வருகின்றனர். தற்போது புதிய மந்திரிகள் பதவி ஏற்று உள்ளதால், அவர்களுக்கு இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டியது உள்ளது. மந்திரிகள் அனைவருக்கும் நேற்று இலாகா ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதன்படி இலாகா ஒதுக்கப்படவில்லை.

இலாகா ஒதுக்கீடு தொடர்பாக கடந்த சில தினங்களாக இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, துணை முதல் மந்திரி அஜித் பவாருக்கு நிதித்துறை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், முதல் மந்திரி உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு சுற்றுச்சூழல் துறை கிடைக்க இருப்பதாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை இலாகா தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனில் தேஷ்முக்கிற்கு கிடைக்கலாம் எனவும் மராட்டிய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போக, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளையும் தேசியவாத காங்கிரஸ் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com