உங்கள் குடும்பத்தில் ஒருவரான என்னை மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள் - அமேதி தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி உருக்கமான வேண்டுகோள்

உங்கள் குடும்பத்தில் ஒருவரான என்னை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள் என்று ராகுல் காந்தி அமேதி வாக்காளர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Published on

அமேதி,

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் 3 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடு கிறார். இந்த தொகுதியில் 5-வது கட்டமாக நாளை (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி அமேதி தொகுதி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எனது அமேதி குடும்பத்தின் உறுப்பினர்களே, உங்களின் இன்னல்களை கவனிக்கவும், உங்கள் குரலை உயர்த்தவும், உறுதியாக நிற்கவும் எனக்கு வலிமையை கொடுத்தீர்கள். மத்தியில் காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்கும் என்ற உறுதியை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அப்போது அமேதியில் பா.ஜனதா கட்சியால் முடக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் மீண்டும் தொடங்கும்.

மே 6-ந்தேதி (நாளை) நீங்கள் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து உங்களது குடும்பத்தில் ஒருவரான என்னை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள். அமேதி தான் எனது புனிதபூமி. விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் என்னை அவர்களுக்காக வேலை செய்ய பணித்தார்கள்.

நீங்கள் என் மீது அதிகமான அன்பு செலுத்தினீர்கள். அதுவே என்னை வலிமையாக்கியது. இப்போது நான் வடக்கில் இருந்து தெற்கையும், கிழக்கில் இருந்து மேற்கையும் இணைக்க முயற்சிக்கிறேன். அதனால் தான் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறேன்.

தேர்தல் சமயத்தில் பா.ஜனதாவினர் வாக்காளர்களை கவருவதற்காக அடுக்கடுக்கான பொய்களை சொல்வதையும், ஆறுபோல் பணத்தை செலவழிப்பதையும் வழக்கமாக கொண்டவர்கள் என்பது அமேதி குடும்பத்தினருக்கு தெரியும்.

அமேதியின் வலிமையே அதன் நேர்மை, ஒற்றுமை, எளிமை என்பது பா.ஜனதாவினருக்கு தெரியாது. காங்கிரசின் நோக்கம் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரானது. பா.ஜனதா 15, 20 தொழில் அதிபர்களை நாட்டின் உரிமையாளர்களாக ஆக்க நினைக்கிறது. ஆனால் காங்கிரசின் எண்ணம் மக்கள் தான் நாட்டின் உரிமையாளர்கள் என்பது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com