

மாமல்லபுரம்,
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கோவில்கள், சிற்பங்கள் உலகப்புகழ் பெற்ற பாரம்பரிய சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஊரில் இன்னும் நவீன பஸ்நிலையம் அமைக்கப்படவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக தலசயன பெருமாள் கோவில் எதிரே உள்ள குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது.
தினமும் இந்த குறுகிய பஸ் நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு, தனியார், மாநகர பஸ்கள் வந்து செல்கின்றன. ஒரே நேரத்தில் பல பஸ்கள் வந்து செல்வதால் பஸ்கள் நிறுத்த இடமில்லாத நிலை உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இங்கு குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை.
இந்த சூழலில் கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுலா பகுதிக்கேற்ப கருக்காத்தம்மன் கோவில் எதிரில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள 6 ஏக்கர் இடத்தில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறையிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அதற்காக வரைபடங்களையும் மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக்குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டது.
மேலும் புதிய பஸ் நிலைய பணிக்காக அங்கிருந்த 10 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அவர்களுக்கு மாற்று இடமும் வழங்கப்பட்டது. பிறகு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டதோடு சரி, பிறகு பல ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த 26 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பஸ் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலமும் தற்போது சீமைகருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது.
மேலும் பஸ் நிலையத்தில் போதிய இடம் இல்லாததால், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரிக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் வருவது கிடையாது. அங்குள்ள புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகிறது. இதனால் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் சிரமம் அடைகின்றனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜசேகர் கூறும்போது, பல ஆண்டுகளாக சர்வதேச தரத்திற்கு இணையாக பஸ் நிலையம் அமைப்பதாக கூறி உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து செல்கின்றனர். இதுவரை இப்பணிகளை தொடங்க ஆர்வம் காட்டவில்லை. தற்காலிக பஸ் நிலையத்தில் சிறப்பு பஸ்கள் நிற்க கூட இடவசதி இல்லை. இந்த குறுகிய பஸ் நிலையத்தில் விடுமுறை தினங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது என்றார்.
நிரந்தர பஸ் நிலையம் இல்லாததால் மாமல்லபுரம் நகரின் வளர்ச்சிப்பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இங்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் தற்போது உள்ள இந்த குறுகிய பஸ் நிலையத்தை பார்த்து முகம்சுழிக்கும் நிலை உள்ளது.
எனவே கிடப்பில் உள்ள புதிய பஸ் நிலைய பணிகளை உடனடியாக தொடங்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாகவும், கோரிக்கையாகவும் உள்ளது.