‘பானி’ புயல் விவகாரத்தில் கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்கிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி என்னுடன் தொலைபேசியில் பேச மறுத்துவிட்டார். அவர் ‘பானி’ புயல் விவகாரத்தில் கூட அரசியல் செய்கிறார் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
Published on

தம்லுக்,

மேற்கு வங்காள மாநிலம் தம்லுக் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஒடிசா மாநிலத்தில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன். இந்த புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் விவாதிக்க விரும்பினேன். அதற்காக அவருக்கு போன் செய்தேன்.

ஆனால், தீதி (மம்தா) கர்வம் பிடித்தவர். என்னுடன் பேச மறுத்துவிட்டார். அவர் தொலைபேசியில் அழைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால், அவர் அழைக்கவே இல்லை.

மம்தா பானர்ஜி வேகத்தடை போன்றவர். அவர் மலிவான அரசியல் செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். மாநில அரசு அதிகாரிகளுடனாவது விவாதிக்க விரும்பினேன். ஆனால், அதையும் மாநில அரசு அனுமதிக்கவில்லை.

மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை மம்தா பானர்ஜி பாராட்டவில்லை. அப்படி பாராட்டுவது, தனது ஓட்டு வங்கியை பாதிக்கும் என்று அவர் பயப்படுகிறார்.

ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பானி புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்காள மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியதை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து இருந்தனர். இந்த பின்னணியில், பிரதமர் மோடி இக்குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.

பின்னர், மேற்கு வங்காளத்தில் ஜார்கிராம் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

ஜெய் ஸ்ரீராம் என்று உச்சரிப்பவர்களை மம்தா பானர்ஜி சிறையில் தள்ளுகிறார். நான் இன்று இங்கு ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னால், அவர் என்னை சிறையில் தள்ள முடியுமா?

மம்தா பானர்ஜி, தான் பிரதமர் ஆவதற்காக மகாகூட்டணியை நம்பிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரது பிரதமர் கனவு ஏற்கனவே பொய்த்துவிட்டது. அவரால் மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகள் கூட வெல்ல முடியாது.

இந்துக்களின் வன்முறை குணத்துக்கு ராமாயணம், மகாபாரதமே சாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். இந்து மதத்தை தரக்குறைவாக பேசுவதே கம்யூனிஸ்டுகளுக்கு வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com