ஆளுங்கட்சிக்காக தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்பு; ராஜீவ் மீது புகார் கூறியவர் பானர்ஜி என தகவல்

தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்கிறார் என மம்தாவால் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் கொல்கத்தா காவல் ஆணையர் என தகவல் தெரிய வந்துள்ளது.
ஆளுங்கட்சிக்காக தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்பு; ராஜீவ் மீது புகார் கூறியவர் பானர்ஜி என தகவல்
Published on

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் விசாரணை நடத்தவும், வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை பெறவும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் உள்ளூர் போலீசாரால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போலீஸ் கமிஷனரின் வீட்டுக்கு நேரில் சென்றதோடு, மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த புத்ததேப் பட்டாச்சார்யா தலைமையிலான இடது சாரியின் ஆட்சியின்பொழுது, அரசியல் எதிரிகளின் தொலைபேசி பேச்சுகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த ஒட்டு கேட்பு விவகாரங்களில் ஈடுபட்டவர் ராஜீவ் குமார் என மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறினார். ஆனால் ஆளுங்கட்சி இதனை மறுத்தது. இந்த நிலையில், குமாருக்கு ஆதரவாக பானர்ஜி தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.

உத்தர பிரதேசத்தினை சேர்ந்த கணினி அறிவியலில் பொறியியல் படிப்பினை முடித்துள்ள 53 வயது நிறைந்த குமார் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

இவரை பற்றி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பலர், தன்னுடன் பணியாற்றியவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஆதரவாக நின்றவர். உண்மையில் ஒரு குழுவின் தலைவராக செயல்பட்டவர். கொல்கத்தா காவல் துறையில் அவருக்கு அதிக மதிப்பு உள்ளது என தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு மம்தா ஆட்சிக்கு வந்தபொழுது குமாரை முக்கியமற்ற பதவிக்கு மாற்ற மேற்கொண்ட முயற்சியை சில மூத்த காவல் துறை அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

இதன்பின் கடந்த 2013ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணையின் சிறப்பு புலனாய்வு குழு தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர் அரசுடன் இவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com