சிறுபாக்கம்,
மங்களூரில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த ஊராட்சியின் மேற்குபுறம் உள்ள குளத்து மேட்டில் இருந்து காலனிக்கு செல்லும் சாலை, போயர் தெரு சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாக வும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள், அரசு விடுதியில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். கிராமசபை கூட்டத்திலும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி கோஷமிட்டனர். மேலும் அனைவரும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் ஊர் முக்கியஸ்தர் ஒருவர் விரைந்து வந்து, இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.