உள்ளாட்சி பிரதிநிதிகளாக பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது மணிசங்கர் அய்யர் கூறுகிறார்

உள்ளாட்சி பிரதிநிதிகளாக பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது என மணிசங்கர் அய்யர் கூறினார்.
Published on

குத்தாலம்,

மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை வட்டார தலைவர்கள் அன்பழகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராமானுஜம் வரவேற்றார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

15 லட்சம் பெண்கள்

பஞ்சாயத்துராஜ் சட்டப்படி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் தமிழகத்தில் 50 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெண்கள் அதிக அளவில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக வெற்றி பெற்றுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பெண்கள், அனைத்தையும் கற்று கொண்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும்.

இந்தியாவில் 15 லட்சம் பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இது உலகளவில் உள்ள பெண் மக்கள் பிரதிநிதிகளைவிட கூடுதல் எண்ணிக்கையாகும். இதுதான் நமக்கு பெருமை. இதேபோல் நாடாளுமன்றம், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். ஏற்கனவே 547 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் பாதிக்கப்படாத வகையில் மேலும் பெண்கள் மட்டும் தேர்ந்தெடுக்கும் வகையில் 200 கூடுதல் இடங்களை ஏற்படுத்தி 747 மக்களவை உறுப்பினர்கள் பதவிகளை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், மாநில எஸ்.சி., எஸ்.டி., பிரிவு செயலாளர் பூவாளை மதிவாணன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயவீரபாண்டியன், மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கிரிஜா, சுதா, ரோஷி, கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com