திருச்சி,
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, சமீபத்தில் டெல்லி சென்று பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போது, விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக 111 விவசாயிகள் சுயேச்சையாக போட்டியிடும் முடிவை கைவிடுவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையே, அய்யாக்கண்ணு அமித்ஷாவிடம் விலைபோய்விட்டதாகவும், அவர் பெட்டி நிறைய பணம் வாங்கி விட்டதாகவும் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் கேலி, கிண்டல் செய்து அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் வதந்தி பரப்பப்பட்டு வருவதாகவும், எனவே, அவ்வாறு அவதூறு பரப்புவோர் யார்? என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து அய்யாக்கண்ணு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் புகார் கொடுத்தனர். அப்போது போலீஸ் கமிஷனர், சைபர் கிரைம் போலீசார் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் அய்யாக்கண்ணு நிருபர் களிடம் கூறியதாவது:-
டெல்லியில் விவசாயிகள் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்திட தி.மு.க. தலைவர் ஸ்டாலினோ, கனிமொழியோ அல்லது காங்கிரஸ்காரர்களோ எங்களுக்கு ஒரு பைசாகூட கொடுத்து அனுப்பவில்லை. போராட போ.. என சொல்லவும் இல்லை. அவர்கள்தான், ஏன் வெயிலில் கிடந்த இப்படி போராட்டம் நடத்துகிறீர்கள். புறப்பட்டு ஊருக்கு வாங்க என்றுதான் சொன்னார்கள். ஆனால், இப்போது ஒரு தவறான, தேவையில்லாத செய்தியை தேர்தல் காலத்தில் பரப்பப்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்தும் போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்.
அதுமட்டுமல்ல, நாங்கள் டெல்லியில் அமித்ஷாவிடம் பணம் வாங்கிக்கொண்டு வந்து விட்டதாக பரப்புரை செய்கிறார்கள். அது குறித்தும் புகார் கொடுத்துள்ளோம். இந்த வதந்திகளை யார் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என கண்டுபிடித்து, அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரவும், குற்றவியல் (கிரிமினல்) வழக்கும் தொடர்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க தகுந்த ஆவணங்களை கண்டறிந்து தருவதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். உரிய ஆதாரங்கள் கிடைத்ததும் வருகிற திங்கட்கிழமையே சம்பந்தப்பட்டவர்கள் மீது மானநஷ்ட வழக்கும், குற்றவியல் வழக்கும் தொடரப்படும்.
நாங்கள் விவசாயிகள். எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என சொன்னதே கிடையாது. விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம் என நாங்கள் சமீபத்தில் பொதுவான தீர்மானமே போட்டு இருக்கிறோம். இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ஓட்டுவாங்க கூடாது என எங்களை தவறாக வழிநடத்தும் நபர்கள் யார்? என்றும், பின்புலத்தில் இருந்து இயக்குபவர்கள் யார்? என கண்டறியவும்தான் சைபர்கிரைம் போலீசார் விசாரிக்க மனு கொடுத்துள்ளோம்.
மேலும் பி.ஆர்.பாண்டியன் என்பவர் எங்களை பற்றி அவதூறாக சொல்லி இருப்பது குறித்து அவர்மீது தனியாக ஒரு நஷ்டஈடு வழக்கு தொடர இருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.