மாந்திரீக பூஜை நடத்திய விவசாயி கொலை: தம்பி-மனைவி கைது

புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் மாந்திரீக பூஜை நடத்திய விவசாயி கொலை செய்யப்பட்டார்.
Published on

வந்தவாசி,

புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் மாந்திரீக பூஜை நடத்திய விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தம்பி மற்றும் தம்பியின் மனைவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வந்தவாசி அருகே நடந்த இந்த பரபரப்பான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வந்தவாசி தாலுகா அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 57). விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் இவருடைய தம்பி தாமோதரன் (55). இருவருக்கும் அந்த கிராம ஏரியையொட்டி அடுத்தடுத்து நிலம் உள்ளது. இவர்களுடைய நிலத்தின் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் பாலாஜி நேற்று முன்தினம் இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயன் என்பவருடன் சேர்ந்து தனது நிலத்தில் மாந்திரீக பூஜையில் ஈடுபட்டாராம்.

இதை அறிந்து அங்கு வந்த தாமோதரன், அவருடைய மனைவி சாந்தா (46) மகன் அமல்நாத் (25) ஆகியோர் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் 3 பேரும் சேர்ந்து கத்தி, இரும்பு குழாய் ஆகியவற்றால் பாலாஜியை தாக்கி விட்டு சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜியை அவருடைய குடும்பத்தினர் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது பற்றி பாலாஜியின் மகன் மாரிமுத்து 3 பேர் மீது தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப் பதிவு செய்து தாமோதரன், சாந்தா ஆகியோரை கைது செய்தார். அமல்நாத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com