புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நேற்று முழுவீச்சில் நடந்தன.
மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களில், தேர்தலை புறக்கணிக்குமாறு எழுதப்பட்ட சுவரொட்டிகளை மாவோயிஸ்டுகள் ஏற்கனவே ஒட்டி இருந்தனர்.
மாவோயிஸ்டு நடமாட்டம் அதிகமாக உள்ள கந்தமால் நாடாளுமன்ற தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. அதையொட்டி, அத்தொகுதியில் அடங்கிய புல்பானி சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடிக்கு தேர்தல் பணியாளர்கள் சிலர் நேற்று ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை பெண் தேர்தல் அதிகாரி சஞ்சுக்தா திகல் என்பவர் அழைத்துச்சென்று கொண்டிருந்தார். அடர்ந்த காடு வழியாக சென்றபோது, ஓரிடத்தில் சாலையில் மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
சந்தேகம் அடைந்த சஞ்சுக்தா திகல், அது என்ன என்று பார்ப்பதற்காக, வாகனத்தை விட்டு கீழே இறங்கினார். அப்போது, பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள், அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே பெண் அதிகாரி பலியானார்.
மற்ற தேர்தல் பணியாளர்கள், வாகனத்திலேயே இருந்தனர். அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர். இத்தகவலை மாநில போலீஸ் டி.ஜி.பி. பி.கே.சர்மா தெரிவித்தார்.
கந்தமால் மாவட்டத்தில் மற்றொரு இடத்தில் தேர்தல் வாகனத்துக்கு மாவோயிஸ்டுகள் தீவைத்தனர். மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏற்றிக்கொண்டு, தேர்தல் பணியாளர்கள் ஒரு வாக்குச்சாவடிக்கு அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பிரிங்கியா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், சீருடை அணிந்திருந்த மாவோயிஸ்டுகள், வாகனத்தை வழி மறித்தனர்.
பணியாளர்களை கீழே இறங்குமாறு உத்தரவிட்டனர். அதன்படி, அவர்கள் கீழே இறங்கியதும், அந்த வாகனத்துக்கு தீவைத்தனர். பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களின் கதி என்ன என்று தெரியவில்லை.