புதுச்சேரி,
புதுவை நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் மீன், இறைச்சி, காய்கறி, மளிகை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதன் காரைகளும் பெயர்ந்த நிலையில் உள்ளன. தற்போது பெய்து வரும் மழை காரணமாக மார்க்கெட்டின் மேற்கூரைமேலும் சேத மடைந்து இருந்தது.
நேற்று காலை மார்க்கெட்டில் பொதுமக்கள் வழக்கம்போல் காய்கறிகள், மீன் ஆகியவற்றை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாரதவிதமாக மீன் விற்பனை கடை ஒன்றின் மேற்கூரையிலிருந்து கான்கிரீட் காரை பெயர்ந்து விழுந்தது.
இதில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நரம்பை பகுதியை சேர்ந்த காசியம்மாள் (வயது 50), பூரணாங்குப்பத்தை சேர்ந்த ராசாம்பாள் (55) ஆகியோருக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. நெல்லித்தோப்பு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் மார்க்கெட்டுக்கு வந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கேள்விப்பட்டதும் தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்-அமைச்சர் நாராயணசாமி நெல்லித்தோப்பு மார்க்கெட்டிற்கு வந்தார். அவர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு உடனடியாக சீர்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காயமடைந்த காசியம்மாள், ராசாம்பாள் ஆகியோரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். முதல்-அமைச்சருடன் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.