“எடை குறைந்த யூரியா உர மூட்டைகளை மாற்ற நடவடிக்கை” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் எடை குறைந்த யூரியா உர மூட்டைகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“எடை குறைந்த யூரியா உர மூட்டைகளை மாற்ற நடவடிக்கை” - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
Published on

தூத்துக்குடி,

விவசாயத்துக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உரத் தேவையினை முழுமையாகப் பூர்த்தி செய்யும் வகையில் வெளிநாடுகளில் இருந்தும் கப்பல் மூலம் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் குடோன்களில் வைத்து உர மூட்டைகளில் அடைக்கப்பட்டு மாவட்டம் வாரியாக தேவைக்கு ஏற்ப அனுப்பப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட குறிப்பிட்ட நிறுவனத்தின் யூரியா உர மூட்டைகள் எடை குறைவாக உள்ளதாக புகார்கள் வந்தன. 45 ஆயிரத்து 422 மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டதில் 11 ஆயிரத்து 603 மெட்ரிக் டன் உரம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.

எனவே சென்னை வேளாண்மை இயக்குநர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்ட உர நிறுவனத்தின் யூரியா உர மூட்டைகள் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் மொத்தம் 856 மெட்ரிக் டன் யூரியா குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. அந்த உர மூட்டைகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் யூரியா உரம் 166 டன் வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த உரம் இருப்பு வைக்கப்பட்டு இருந்த 15 உர விற்பனை மையங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) மற்றும் வட்டார உர ஆய்வாளர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூட்டைக்கு 200 முதல் 600 கிராம் வரை எடை குறைவாக இருந்த, 132 மெட்ரிக் டன் அளவிலான யூரியா உர மூட்டைகளுக்கு விற்பனைத் தடை விதிக்கப்பட்டு, இது தொடர்பான அறிக்கை வேளாண்மை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து வேளாண்மை இயக்குநர் உடனடியாக எடை குறைந்த உர மூட்டைகளை உரிய எடையுடன் மாற்றித் தர சம்பந்தப்பட்ட உர நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இதனால் அந்த நிறுவனம் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணியை தூத்துக்குடி உள்பட தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இந்த வார இறுதிக்குள் சரியான எடை கொண்ட யூரியா மூட்டைகள் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com