ஒகேனக்கல்லில் மெக்கானிக் சுட்டுக்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ஒகேனக்கல்லில் சுட்டுக்கொல்லப்பட்ட மெக்கானிக்கின் உடலை வாங்க மறுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஜருகு குரும்பட்டியான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி(வயது 27). மெக்கானிக். இவர் தனது உறவினரான 15 வயது சிறுமியுடன் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது பண்ணப்பட்டி என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு அந்த சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

ஆட்கள் நடமாட்டம் குறைந்த அந்தபகுதியில் வந்த 4 பேர் சிறுமியை கையை பிடித்து இழுத்தனர். அதை தட்டிக்கேட்ட முனுசாமியை 4 பேரில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த 4 பேரும் தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முனுசாமி கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க பென்னாகரம் துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாலைமறியல்

கொலை கும்பலை சேர்ந்தவர்கள் குறித்து அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சில அடையாளங்களை போலீசாரிடம் தெரிவித்தார். அந்த அடையாளங்களை உடைய சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலையாளிகள் வனப்பகுதிகளில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முனுசாமியின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதையொட்டி அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கணக் கானோர் அங்கு திரண்டனர். நேற்று பிற்பகலில் பிரேத பரிசோதனை முடிந்தபின் முனுசாமியின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று முனுசாமியின் உறவினர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரி முன்பு தர்மபுரி-சேலம் சாலையில் திரண்ட முனுசாமியின் உறவினர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கொலையாளிகளை விரைவாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலரை போலீசார் பிடித்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அதன்பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து முனுசாமியின் உடல் ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் வளாகத்தில் நேற்று இரவு வரை பரபரப்பு தொடர்ந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com