

மும்பை,
மும்பை காங்கிரஸ் கட்சி தலைவரும், வடமும்பை வேட்பாளருமான மிலிந்த் தியோரா, மராட்டிய தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் வாக்கு மையத்தின் அருகில் சந்தேகப்படும்படியான நடமாட்டங்கள் இருப்பதாகவும், சில மர்ம நபர்கள் மற்றும் வாகனங்கள் அங்கேயே வட்டமிட்டு வருவதாகவும் தகவல் கொடுத்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வுகள் வாக்குப்பதிவு எந்திரத்தின் பாதுகாப்பு குறித்த பலத்த சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை மையத்தின் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் அதிகரிக்கவேண்டும் என்று நான் தலைமை தேர்தல் கமிஷனரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அதுமட்டும் இன்றி ஏற்கனவே பாதுகாப்பு பணியில் உள்ள பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து வாக்குப்பதிவு எந்திரத்தை பாதுகாக்கும் பணியில் ஈடுபட காங்கிரஸ் கட்சி தொண்டர்களை அனுமதிக்கவேண்டும். மேலும் கண்காணிப்பு கேமராவின் ரகசிய கடவு சொல்லை காங்கிரஸ் கட்சியினருக்கு வழங்கவேண்டும். இதன்மூலம் வாக்குப்பதிவு மையத்தை சுற்றி நடக்கும் சம்பவங்களை நாங்களும் கண்காணிக்க முடியும். இவ்வாறு அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.