சென்னை,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நாகர்கோவிலில் நேற்று முன்தினம் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் பேரணி நடந்தது.
அதில் பா.ஜனதா தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
வருகிற 9-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் பி.தங்கமணி ஆகியோர் நேற்று சென்னையில் இருந்து டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். என்.பி.ஆருக்கு எதிராக சட்டசபையில் நிறைவேற்ற உள்ள தீர்மானம் குறித்து இருவரும் அமித்ஷாவிடம் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே பா.ஜனதா தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகத்தில் நேற்று இரவு சந்தித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அவர் முதல்-அமைச்சருடன் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் அரை மணிநேரம் நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த இரண்டு சந்திப்புகளும் அரசியல் வட்டாரங்களில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.