“மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது” தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆரூடம்

“மு.க.ஸ்டாலினின் முதல்- அமைச்சர் கனவு ஒருபோதும் பலிக்காது” என்று அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
Published on

சென்னை,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து வேலாயுதம்பாளையம், குன்னம் சத்திரம், க.பரமத்தி ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. எம்.ஜி.ஆர். குறிப்பிட்டது போல தீய சக்தியான தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு உதயசூரியன் சின்னத்தில் தற்போது போட்டியிடுகிறார்.

கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க.வில் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு ஆசை வார்த்தைகளைக் அளித்து, அவர்களை மாற்று முகாமுக்கு அழைத்துச் சென்று, தற்போது அவர்கள் அனைவரையும் நடுத்தெருவிலே விட்டுவிட்டு தி.மு.க.வில் சேர்ந்து இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த முறை நடந்த அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலின் போது, ஜெயலலிதா ஆணைக்கிணங்க அ.தி.மு.க. சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். எனது தலைமையில் மற்ற மூத்த அமைச்சர்கள் பலரும் இத்தொகுதியில் முகாமிட்டு இரவு பகல் பாராமல் உழைத்ததன் பேரில் அவர் எம்.எல்.ஏ. ஆனார்.

ஏறத்தாழ 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் தங்களது சொந்த வேலைகளை விட்டு விட்டு இவரது வெற்றிக்காக கடுமையாக தேர்தல் பணியாற்றினார்கள். ஆனால், இன்றோ அவர்களது உழைப்புக்கு துரோகம் செய்து விட்டு தி.மு.க.வில் சேர்ந்து கொண்டார். இவருக்கு தேர்தல் பணியாற்றி இவரை வெற்றிபெறச் செய்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இப்பேற்பட்ட இவரால் எப்படி மக்களுக்கு நன்மை செய்ய முடியும்? இவர் ஒரு அரசியல்வாதி அல்ல, அரசியல் வியாபாரி. நான் எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறேன். இவரைப் போன்று யாரையும் நான் பார்த்தது இல்லை. ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்.

இவர் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருக்கமாட்டார். அதுபோலவே மக்களுக்கும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே வாக்காளர்கள், யார் மக்களுக்காக உழைக்க கூடியவர்கள்?, யார் பண்பாளர்கள்? என்பதை எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், முதல்-அமைச்சர் விவரம் இல்லாமல் இருக்கிறார் என கூறினார். தனது மகனை வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக விவரமான முறையில் அவர் செய்த சில காரியங்களால் அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு வேண்டப்பட்ட பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினரால் சோதனை மேற்கொண்ட போது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது.

இதையெல்லாம் மறந்து ஏதோ விவரமானவர் என்பது போன்று துரைமுருகன் பேசிக்கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போது சட்டமன்றத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 97 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்றும், நடைபெறவுள்ள 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்று 119 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமையும் என கூறினார்.

தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்கும் என கூறும் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மான கொண்டுவருவது ஏன்? தற்போது அவர்களுக்கே அந்த நம்பிக்கை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு. அவருடைய கனவு ஒருபோதும் பலிக்காது.

பதவிக்கு யார் வர வேண்டும்? என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். ஆனால் மு.க.ஸ்டாலின் அதை எல்லாம் மறந்து ஏதோ வெற்றி பெற்றுவிட்டது போல தொடர்ந்து பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரையில் மக்கள் இடுகின்ற கட்டளையை நிறைவேற்றித்தருவதைத் தான் எங்கள் தலையாயக் கடமை என கருதுகிறோம்.

எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி.செந்தில்நாதனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com