எம்.எல்.ஏ. ஆறுகுட்டி எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார்

கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. ஆறுகுட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்தார்.
Published on

சேலம்,

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி. இவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க (புரட்சித்தலைவி அம்மா) அணிக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இருந்தார். அந்த அணியில் அவருக்கு, உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வருகிற 29-ந் தேதி கோவையில் மாவட்ட அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணியின் செயல் வீரர்கள் கூட்டம் கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பந்தல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தார்.

இதனால் அவர், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு மாற போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. திடீரென்று விலகினார்.

இதனையடுத்து இன்று சேலத்தில் முதல்-அமைச்சர் பழனிச்சாமியை சந்தித்த எம்.எல்.ஏ. ஆறுகுட்டி அவரது அணியில் இணைந்தார். ஆறுகுட்டி இணைந்ததன் மூலம் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் பழனிசாமி அரசின் பலம் 123 ஆனது. பின்னர் ஆறுகுட்டி பேட்டியளித்து பேசுகையில், பன்னீர்செல்வம் அணியின் கோவை செயல்வீரர்கள் கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. தொகுதி மக்களின் நலனுக்காகவே முதல்-அமைச்சர் பழனிச்சாமி அணியில் இணைந்தேன். எனது தொகுதிக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி கூறிய காரணத்திற்காக ஓபிஎஸ் அணி என்னை புறக்கணித்தது.

நீர்நிலைகள் தூர்வரும் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூட முதல்-அமைச்சரின் அரசை பாராட்டினார் என்று பேசினார்.

இரு அணிகள் இணையும் என காத்திருந்தேன், இணையாததால் மாறிவிட்டேன், ஓபிஎஸ் அணியிலுள்ள மற்ற எம்எல்ஏ, எம்பிக்களும் ஈபிஎஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என பேசிஉள்ளார் ஆறுகுட்டி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com