

இளம்பெண்களின் இன்றைய உலகம் ரொம்பவும் வித்தியாசமானதாக இருக்கிறது. படிக்கவேண்டும், கலைகளை பயிலவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணங்கள் இருந்தாலும் அதையும்தாண்டி அவர்கள் பொதுநலமாகவும் சிந்திக்கிறார்கள். தாங்கள் கற்றுக்கொண்டிருக்கும் கல்வியாலும், கலைகளாலும் இளம் வயதிலே தங்களால் முடிந்த உதவிகளையும் சமூகத்திற்கு செய்துகொண்டிருக் கிறார்கள். சேவை செய்வதை தங்கள் சமூக கடமையாகவும் கருதுகிறார்கள். அதே நேரத்தில் பெண்கள் எல்லா நேரத்திலும் பூக்களை போன்று மென்மையானவர்கள் அல்ல.. தேவைப்பட்டால் அவர்கள் புயலாகி தாக்கவும் செய்வார்கள் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஆண்களோடு போட்டிபோட்டு களரி போன்ற வீரக் கலைகளில் தேர்ச்சிபெற்று, தன்னம்பிக்கையோடு வலம் வருவதை தங்கள் அடையாளமாகவும் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நவீனகால நாயகிகளாக வலம் வருகிறவர்களில் மயூரா, ஹம்சா இருவருக்கும் தனி இடம் உண்டு.
இவர்கள் இரட்டையர்கள். ஆனால் இருவரும் ஒரே மாதிரிதான்.. என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து தங்கள் தனித்துவத்தை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு 19 வயது. இருவருக்குமான பிறந்த நேர இடைவெளி 56 வினாடிகள். மயூரா எஸ்.எஸ்.என்.கல்லூரியில் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங்கும், ஹம்சா எத்திராஜ் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரமும் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இரட்டையர்கள் என்றாலும் இவர்கள் விருப்பு வெறுப்புகளில் மட்டுமல்ல, தோற்றத்திலும் வித்தியாசமாகவே காணப்படுகிறார்கள். மயூரா 50 கிலோ எடையுடன், 160 செ.மீ. உயரம் கொண்டவர். ஹம்சா 60 கிலோ எடையுடன், 165 செ.மீ. உயரம் கொண்டவர்.
இவர்களை நாம் சந்தித்தது களரிக் களத்தில். அதுவும் திரில்லான பயிற்சிக் காட்சியில். ஹம்சா, களரி பொசிஷனில் வலுவான நிலையில் கால் களை ஊன்றி நின்றுகொண்டிருக்க, அவர் மீது கால்களை ஊன்றியபடி பயிற்சியாளர் வசந்த் நின்று களரி அடவு ஒன்றை பிரயோகம் செய்துகொண்டிருந்தார். பயிற்சியாளர் எடையை தாங்கிக்கொண்டு என் பலத்திற்கு இதெல்லாம் ஈடில்லை என்பதுபோல் ஹாயாக நின்று கொண்டிருந்தார், ஹம்சா. அப்படி தூக்கியநிலையில் 20 நிமிடங்கள் நின்ற போதும் சோர்ந்துபோகாமல் புத்துணர்ச்சியோடு நம்முன்னே வந்து நின்றார்!
பயிற்சியாளர் என்னைவிட 5 கிலோ அதிக எடைகொண்டவர். ஆனாலும் எனக்கு அது அதிக எடையாக தெரியவில்லை. நாங்கள் நின்றிருந்த அடவு முறைக்கு ஒத்தயடி அமர்ந்து என்று பெயர். இது, களரி பயிற்சியில் நான் எந்த அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கிறேன் என்பதை பரீட்சித்து பார்க்கும் ஒரு அடவுமுறையாகும். களரி கலையை நமது மூதாதையர்கள் விலங்குகளின் இயக்க இயல்புநிலையில் இருந்து கற்றிருக்கிறார்கள். அதனால் அந்தந்த விலங்குகளின் பெயரில் கஜ வடிவு, அஸ்வ வடிவு, சர்ப்ப வடிவு போன்ற பல பெயர்களில் ஒவ்வொரு பொசிஷனும் அழைக்கப்படுகிறது.
நாங்கள் இருவரும் அவ்வப்போது மாலையில் இரண்டரை மணி நேரம் களரி பயிற்சி பெறு கிறோம். அதன் மூலம் தன்னம்பிக்கையும், தைரியமும், எதையும் தாங்கும் பக்குவமும் கிடைத்திருக்கிறது. நானும், மயூராவும் பரதநாட்டிய கலைஞர்கள். அதுபோல் களரியிலும் கற்றுத்தேர்ந்திருக்கிறோம். இரண்டுமே எங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படுகிறது. பெண்கள் தங்கள் லட்சியத்தை அடைய உடல் வலிமையும், மனவலிமையும் தேவை. இன்றைய சூழ்நிலையில் வாழ்க்கையை எதிர்கொள்ள தற்காப்புக்கலைகள் மிக அவசியம் என்கிறார், ஹம்சா. மயூராவும் களரியில் பல அடவுகளை அற்புதமாக பிரயோகிக்கிறார். இவர்கள் சென்னை திருவான்மியூரில் வசிக்கிறார்கள். தந்தை பாலகுருநாதன்தான் இவர்களது பரதநாட்டிய குரு.
பயனுள்ள கலைகளில் எத்தனையை பயில வாய்ப்பு கிடைக்குமோ அத்தனையையும் எத்தனை சிரமத்திற்கு மத்தியிலும் ஆர்வத்தோடு கற்றுவிடவேண்டும் என்ற தந்தையின் சொல்லுக்கிணங்க இவர்கள் ஆளுக்கு ஒரு டஜன் கலைகளை கற்றிருக்கிறார்கள். பரதம், மேற்கத்திய நடனம், களரி, யோகா, தியானம், பாட்டு, ஓவியம், பேச்சு.. என்று அந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 200-க் கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டி யம் ஆடியிருக்கிறார்கள். இசைக் கச்சேரிகளும் நடத்துகிறார்கள். அத்துடன் அவர்களது சமூக சேவையும் தொடர்கிறது. ஆங்கில உரையாடலில் சிறந்து விளங்கும் மயூரா அடையாறில் உள்ள ஸ்ரீசங்கரா சீனியர் செகண்டரி பள்ளிக்கு சென்று அங்கு 1 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி கொடுக்கிறார். அரசு பள்ளி ஆசிரியர் களுக்கும் ஆங்கில பயிற்சி வழங்குகிறார்.
அதே சேவைப் பாதையில் பயணிக்கும் ஹம்சா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த புற்றுநோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு பிடித்த தமிழ்ப்பாடல்கள் எதுவென்று கேட்டு, அதை பாடி அவர்களை மகிழ்விக்கும் பணியினை மேற்கொண்டிருந்தார். இவர் முறைப்படி இசையை கற்றவர் என்பதால் அதனை மியூசிக் தெரபியாக வழங்கி, நோயாளிகளின் ஆரோக்கியம் மேம்படவும் துணைபுரிந்துள்ளார். அதோடு ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஜனபரதம் என்ற திட்டத்தில் இலவசமாக பரதமும் கற்றுக்கொடுக்கிறார்.
இந்த இரட்டையர்களின் பூர்வீக கலைத்தொடர்பு குறிப்பிடத்தக்கது. இவர்களது தாயார் காயத்ரியின் அம்மா கிருஷ்ணவேணி லட்சுமணன் உலகப் புகழ்பெற்ற கலாஷேத்ரா மையத்தின் முதல்வராக பணிபுரிந்தவர். அங்கு நிகழ்த்தப்படும் ராமாயண நாட்டிய நாடகம் பெரும்புகழ் பெற்றவை. அதில் தொடர்ந்து சீதையாக தோன்றி மக்கள் மனதை கவர்ந்தவர், கிருஷ்ணவேணி லட்சுமணன்.
நாங்கள் எங்கள் பாட்டியின் வழித்தோன்றலாக இளம் வயதிலே பரத கலையை பயின்று, அதை பரப்புவதை முழுநோக்கமாக கொண்டிருக்கிறோம். எங்கள் காலம் வரை பரதம் எங்களோடு இருக்கும். எங்கள் தந்தை பாலகுருநாதன், எங்கள் பாட்டி கிருஷ்ணவேணி லட்சுமணனிடம் மாணவராக இருந்து பரதகலை பயின்றவர். அவர் அதில் இளநிலை, முதுநிலை பட்டங்களை பெற்று தற்போது பி.எச்டி. ஆய்விலும் ஈடுபட்டிருக்கிறார். சிங்கப் பூரில் இயங்கும் இந்திய நுண்கலை கழகத்தில் மூத்த நடன ஆசிரியராகவும் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த துறையில் எங்கள் தந்தையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்தும் நாங்கள் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துகிறோம்.. என்று கூறும் மயூரா, கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனைபடைக்க தயாராகிக்கொண்டிருக் கிறார்.
கல்லூரி பயோமெடிக்கல் என்ஜினீயரிங் ப்ராஜெக்ட்டுக்கு நானும், சக மாணவ- மாணவிகள் நான்கு பேரும் சேர்ந்து சமூகத்திற்கு மிகுந்த பலனளிக்கக்கூடிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறோம். அதாவது இதயபாதிப்பு கொண்டவர்களுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. அது இதயத்துடிப்பை சீராக்கி, இதயத்தை சரியாக இயங்கவைக்கிறது. நமது செல்போன் சார்ஜ் மூலம் இயங்குவதை போன்றுதான், பேஸ் மேக்கரும் சார்ஜில் இயங்குகிறது. அதில் இருக்கும் சார்ஜ் நிலவரத்தை தெரிந்துகொள்ளவும், பேஸ்மேக்கரின் முக்கிய பகுதியான லீட்டின் இயக்கத்தை கண்காணிக்கவும் ஒரு கருவியை உருவாக்குவது எங்கள் ப்ராஜெக்ட்டாகும். அது ஒரு செல்போன் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்த ப்ராஜெக்டை நாங்கள் வெற்றிகரமாக முடித்து, அந்த கருவியை வடிவமைத்துவிட்டால் அது மனித சமூகத்திற்கு மிகுந்த பலன்தருவதாக அமையும். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டிருக்கும் ஒவ் வொருவரும் அந்த கையடக்க கருவி மூலம் அவர்களது பேஸ்மேக்கர் இயக்க நிலவரத்தை எளிதாக அறிந்துகொள்ளலாம். இந்த ப்ராஜெக்ட் எங்கள் கனவுத்திட்டமாகும். இதற்கு பேராசிரியர் வி.மகேஷ் வழிகாட்டியாக இருக்கிறார் என்று கூறுகிறார், மயூரா. இவர்கள் தந்தையோடு இணைந்து கிருஷ்ணாஞ்சலி என்ற நாட்டிய பயிற்சிப் பள்ளியையும் நடத்துகிறார்கள்.
இந்த சகலகலாவல்லிகள் இரட்டையர்களாக இருப்பதால், நிறைய பலன்கள் இருந்தாலும் சில நெருடல்களும் இருக்கத்தான் செய்கின்றன.
நாங்கள் இருவரும் இரட்டையர்கள் என்றாலும் நடை, உடை, செயல்பாடு, குணாதிசயம் போன்ற அனைத்திலும் வெவ்வேறானவர்கள். நாங்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவராக திகழ விரும்புகிறோம். அதனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஒரே மாதிரி என்று மற்றவர்கள் சொல்லிவிடாத அளவுக்கு எங்களையே நாங்கள் தோற்றத்திலும், செயலிலும் வேறுபடுத்திக்கொண்டோம். அதுதான் எங்களுக்கு பிடித்திருக்கிறது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். பின்பு கல்வியிலும் அவரவருக்கு பிடித்த வெவ்வேறு துறைகளுக்கு மாறிவிட்டோம். கல்வியிலும் நாங்கள் சாதிப்போம், அதே நேரத்தில் அன்பும், கலையும் எங்களை ஒன்றாக பிணைத் திருக்கிறது. எதிலும் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டோம்.
நமது சமூகத்தில் பொதுவாகவே பக்கத்து வீட்டு குழந்தையோடு, தங்கள் குழந்தையை ஒப்பிட்டு குறைகாணும் வழக்கம்உண்டு. அதே போல் நாங்கள் இரட்டையர்கள் என்று அறிந்ததும், மேடையில் எங்கள் நடனத்தை பார்த்துவிட்டு அவர் நன்றாக ஆடினாரே.. அவர் அளவுக்கு இவர் ஆடவில்லையே! என்றெல்லாம் சொல்வார்கள். நாங்கள் ஒன்றாக பிறந்தாலும் எல்லாவிதத்திலும் நாங்கள் ஒரே மாதிரி இருக்கவேண்டும் என்று மற்றவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல. தனித்துவமும், திறமையும் எங்களிடம் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு மாதிரி வெளிப்படும். அதே நேரத்தில் சில தருணங்களில் மேடைகளில் எங்களை அறியாமலே நாங்கள் இரட்டையர்கள் என்பதை உணர்வுரீதியாக வெளிப்படுத்தி விடவும் செய்வோம். நடனத்தில் சில அசைவுகளை இருவரும் ஒரே நேரத்தில் செய்துகாட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிடுவோம். எங் களுக்குள் அவ்வப்போது செல்லச்சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால் கொஞ்ச நேரத்திலே இருவரும் சிரித்து மகிழ்ந்து அதை மறந்துவிடுவோம் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்கள் இந்த இரட்டையர்கள். மயூரா பரதநாட்டியத்துக்கு தேவையான உடைகளையும் வடிவமைக்கிறார். ஹம்சா மேடை பேக் டிராப் அலங்காரத்திலும் ஜொலிக்கிறார்.
சினிமா, டெலிவிஷன், குறும்படத்தில் நடித் திருக்கவும் செய்யும் இவர்கள், மேலும் பல கலைகளை கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். அதோடு சமூகத்திற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து பலனுள்ள வாழ்க்கை வாழவும் விரும்புகிறார்கள்.
கலையும், சேவையும் இந்த நவீன கால நாயகி களுக்கு இரு கண்கள்!