

பெரம்பலூர்,
நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந் தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியதாக பா.ஜனதா கட்சியினர் கொடுத்த புகாரின் பேரில், மேலப்பாளையம் போலீசார் நெல்லை கண்ணன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து நெல்லை கண்ணன் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நெல்லை கண்ணன் வீட்டை பா.ஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தினர். அப்போது நெல்லை கண்ணனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் பா.ஜனதாவினர் சென்று போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து நெல்லை கண்ணனை மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை போலீசார், ஆம்புலன்சில் மதுரைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, அவர் மதுரைக்கு வருகிற தகவலை அறிந்த அங்குள்ள பா.ஜனதாவினர் திரண்டனர். மதுரையில் உள்ள பிரபலமான 3 ஆஸ்பத்திரிகள் முன்பு நெல்லை கண்ணனுக்கு எதிராக போராட்டம் நடத்த தயாரானார்கள். இதுபற்றி நெல்லை கண்ணனை அழைத்து சென்றவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் திருவனந்தபுரத்துக்கு அழைத்து செல்லப்படுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் அறை எடுத்து தங்கினார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் தனியார் விடுதியை சுற்றிவளைத்தனர்.
கைது
இதனை அறிந்த பா.ஜ.க.வினர் தனியார் விடுதி முன்பு ஒன்று திரண்டு நெல்லை கண்ணனுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்தநிலையில் அங்கு வந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் போலீசார் நெல்லை கண்ணனை கைது செய்து விடுதியின் பின்புறம் வழியாக அழைத்து சென்று காரில் ஏற்றினர்.
அப்போது பா.ஜ.க.வினர் அவரை தாக்க முயன்றனர். அவர்களை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடுத்தனர். அந்த சமயம் அங்கு பதற்றமான சூழல் உருவானது. உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.இதற்கிடையே நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து மேலப்பாளையம் போலீசார் பெரம்பலூருக்கு வந்தனர். அவர்களிடம் நெல்லை கண்ணனை பெரம்பலூர் போலீசார் ஒப்படைத்தனர். அவரை மேலப்பாளையம் போலீசார் விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.