குளித்தலையில் மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்: பெண் என்ஜினீயர்- பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பலி

குளித்தலையில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் என்ஜினீயரும், பாலிடெக்னிக் கல்லூரி மாணவரும் உயிரிழந்தனர்.
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் துரைசாமி. ஓய்வுபெற்ற சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு 4 மகள்கள். இதில் கடைசி மகளான பரமேஸ்வரி(வயது 20) என்ஜினீயரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்காக படித்து வந்தார்.

துரைசாமியின் முதல் மகளான உமாவின் மகன் பிரவீன்(17). இவர் தனது தாத்தாவான துரைசாமியின் வீட்டில் தங்கி இருந்து திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இந்தநிலையில் பிரவீன் தனது சித்தியான பரமேஸ்வரியை பஸ் ஏற்றிவிடுவதற்காக நேற்று வீட்டில் இருந்து முசிறிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். குளித்தலை- முசிறி இடையே காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com