நின்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதல்; புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ஜினீயர் சாவு - 20-க்கும் மேற்பட்டோர் காயம்

புத்தாண்டு கொண்டாடி விட்டு வீட்டுக்கு திரும்பிய போது நின்ற ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பலியானார். வெவ்வேறு விபத்துகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Published on

புதுச்சேரி,

புதுவை வேல்ராம்பட்டு ஆனந்தா நகரை சேர்ந்தவர் வசந்தராஜ் (வயது 34). என்ஜினீயரான இவர் பிளாஸ்டிக் கப் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு கடற்கரைக்கு சென்றார். நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அவர் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

கொம்பாக்கத்திலிருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கரை வழியாக வசந்தராஜ் வந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த வசந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.

நள்ளிரவில் நடந்த இந்த விபத்தின் போது பலத்த சத்தம் கேட்டுள்ளது. ஏதோ சத்தம் என்று கருதி அந்த பகுதியில் இருந்தவர்கள் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்து விட்டதாக தெரிகிறது. நேற்று காலை விடிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள், வசந்தராஜ் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வசந்தராஜின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இதேபோல் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நள்ளிரவில் வாகனம் ஓட்டும்போது தவறி விழுந்தும், வாகனங்கள் மோதியும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com