பெங்களூரு,
பெங்களூரு குமாரசாமி லே-அவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரத்குமார் என்ற சரத். இவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி சுஷ்மிதா (வயது 26). சுஷ்மிதா கன்னட திரைப்பட பாடகி ஆவார். இவர் கன்னட திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி அதிகாலையில் தனது வீட்டில் சுஷ்மிதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த அன்னபூர்னேஷ்வரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷ்மிதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் சுஷ்மிதா தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக தனது தாய் மற்றும் சகோதரர் யஷ்வந்த் ஆகியோரின் செல்போனுக்கு வாட்ஸ்-அப்பில் குறுந்தகவல் அனுப்பி வைத்திருந்தார்.
அதில் எனது தற்கொலைக்கு கணவர் சரத்குமார், அவரது சகோதரி கீதா, சரத்குமாரின் பெரியம்மா வைதேகி ஆகிய 3 பர் தான் காரணம். அவர்கள் காடுத்த தொல்லையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். கணவருடன் வாழ பிடிக்காமல் இங்கு (தாய் வீட்டில்) தற்கொலை செய்கிறேன்.
எனது சாவுக்கு காரணமான கணவர், அவரது குடும்பத்தினரை சும்மா விடக்கூடாது என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் சரத்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் சுஷ்மிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சரத்குமார் உள்ளிட்ட 3 பேரும் தலைமறைவானார்கள்.
இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் அவர்கள் 3 பேரும் துமகூரு மாவட்டம் பாவகடா பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.