கொச்சி,
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, பேராயர் மூலக்கல் கடந்த மாதம் (செப்டம்பர்) 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பேராயர் மூலக்கல்லை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஜாமீன் கோரி பேராயர் மூலக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கேரள உயர் நீதிமன்றத்தில், நடைபெற்றது. மூலக்கல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் தரப்பு, மூலக்கல் சமூகத்தில் உயரிய அந்தஸ்து கொண்டவராக இருப்பதால், அவரை ஜாமீனில் விடுவித்தால், விசாரணைக்கு இடையூறு செய்வார் என்று தெரிவித்தது.
போலீசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கேரள உயர் நீதிமன்றம், பேராயர் மூலக்கல் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பாலாவில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் ஜாமீன் மனுவை நிராகரித்ததால், கேரள உயர் நீதிமன்றத்தில், பேராயர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். தற்போது, கேரள உயர் நீதிமன்றமும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.