மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் மனு தாக்கல்: பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்து மீண்டும் அதிருப்தி

மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்து அவர் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
மைன்புரி தொகுதியில் முலாயம்சிங் மனு தாக்கல்: பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்து மீண்டும் அதிருப்தி
Published on

மைன்புரி,

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம்சிங், நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் மைன்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அவர் ஏற்கனவே 4 தடவை வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் கூட மைன்புரி, அசம்கார் என்ற 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் அவர் வெற்றி பெற்றார். பிறகு மைன்புரி தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டார். தற்போது, மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

இதையொட்டி, நேற்று முலாயம்சிங் வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக, தனது வீட்டில் இருந்து கட்சியின் மாவட்ட அலுவலகத்துக்கு சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், சமாஜ்வாடி ரதத்தில் அவர் மைன்புரி புறப்பட்டார். அவருடன் அவருடைய மகனும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ், ஒன்று விட்ட சகோதரர் ராம் கோபால் யாதவ் மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில், அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பின்னர், முலாயம்சிங்கிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது, பிரதமர் பதவி போட்டியில், தான் இல்லை என்று முலாயம்சிங் கூறினார். சமாஜ்வாடி கட்சி பெரும் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

ஆனால், கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி பற்றி அவர் எதுவும் கூறவில்லை. மைன்புரியில், மாயாவதியும், சமாஜ்வாடி கட்சி தலைவர்களும் கூட்டாக பங்கேற்கும் பொதுக்கூட்டம் 19-ந் தேதி நடக்கிறது. அதில் கலந்து கொள்வது பற்றி கேட்டதற்கு, முலாயம்சிங் உறுதியான பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதன்மூலம், பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்த அதிருப்தியை அவர் மீண்டும் வெளிப்படுத்தினார்.

பின்னர், மைன்புரியில் உள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க வேண்டிய முலாயம்சிங், அதை புறக்கணித்து விட்டு, நேராக தனது வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால், கட்சி அலுவலகத்தில் காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், அவர் களை சமாதானப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com