

டி.என்.பாளையம்,
கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில் என்கிற ஈஸ்வரமூர்த்தி. இவர் தனது வீட்டின் அருகிலேயே சிறிய பண்ணை அமைத்து அதில் கோழி, சேவல்கள் மற்றும் லவ் பேர்ட்ஸ் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி இவருடைய பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 8 சேவல்களை திருடி சென்று உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி காலையில் ஈஸ்வரமூர்த்தி தனது பண்ணைக்கு வழக்கம்போல் வந்தார். அப்போது அங்கிருந்த 15 சேவல்கள் மற்றும் 3 கோழிகளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பண்ணைக்குள் புகுந்து கோழி மற்றும் சேவல்களை திருடி சென்றது தெரியவந்தது. உடனே இவர் இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசில் புகார் செய்தார். மேலும் அவர் தன் பண்ணையில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், கடந்த 6-ந் தேதி அதிகாலை எனது பண்ணை பகுதிக்கு மர்ம நபர்கள் 2 பேர் வந்து உள்ளனர். பின்னர் அதில் ஒருவன் அங்குள்ள மதில் சுவரில் ஏறி பண்ணைக்குள் குதித்தான். பண்ணைக்குள் குதித்தவனை பார்த்ததும் அங்கிருந்த 2 நாய்களும் குரைத்தன. உடனே அவன் தான் கொண்டு வந்த மயக்க ஸ்பிரேயை நாயின் முகத்தில் அடிக்கிறான். இதில் அந்த 2 நாய்களும் மயங்கி கீழே விழுந்தன. பின்னர் அவன் பண்ணையில் ஒவ்வொரு இடமாக நோட்டமிடுகிறான். இதற்கிடையே மற்றொருவன் சாக்குப்பை மற்றும் கத்தியுடன் பண்ணைக்குள் மதில் சுவரில் ஏறி குதித்து உள்ளே வருகிறான். பின்னர் ஒருவன் கோழி, சேவல்களை எடுத்து மற்றொருவனிடம் கொடுக்க அவன், அந்த கோழிகளை சாக்குப்பையில் போடுகிறான். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி செல்கிறார்கள். இந்த காட்சிகள் அனைத்து பண்ணையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது, என்றார்.
இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோட்டில் உள்ள ஒருவர் வீட்டில் 4 சேவல்களையும் மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் கோழி மற்றும் சேவல்கள் திருடப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கோழி திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.