சென்னையில் பெயர் சேர்த்தல்-திருத்தம் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு: வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1-ந்தேதி வெளியீடு

சென்னையில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், நவம்பர் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Published on

வரைவு வாக்காளர் பட்டியல்

வாக்குச்சாவடி மறுசீரமைத்தல் தொடர்பான அரசியல் கட்சிகளுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (2022-ம் ஆண்டு), ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,500 வாக்காளர்களுக்கு மிகாமல் சீரமைத்து நவம்பர் 1-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகளை கொண்டு ஒவ்வொரு வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பரிந்துரைகளின்படி வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவித்த பரிந்துரைகளை முறையாக பரிசீலித்து அதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பெயர் சேர்த்தல்-திருத்தம்

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுகளில் உள்ள மொத்த வாக்காளர்கள் 40 லட்சத்து 53 ஆயிரத்து 642 ஆகும். மேலும் 906 வாக்குச்சாவடி மையங்களில் 3 ஆயிரத்து 754 வாக்குச்சாவடிகள் உள்ளன.

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (2022) காலத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களை சேர்த்தல், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தல், வாக்காளர் விவரம் திருத்தம் செய்தல் மற்றும் தொகுதிக்குள்ளேயே வசிப்பிட மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை, ஆவண ஆதார நகலுடன் இணைத்து, சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது சென்னை மாநகராட்சியின் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டல அலுவலகத்தில் நவம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் 13-ந்தேதி, 14-ந்தேதி, 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மேற்படி சிறப்பு முகாம்களுக்கும் மற்றும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (2022) ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு கொண்டு செல்ல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் துணை கமிஷனர் விஷு மகாஜன், மாவட்ட வருவாய் அலுவலர் குலாம் ஜிலானீ பப்பா, மண்டல அலுவலர்கள், தேர்தல் வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com