புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்ய வகை செய்யும் மசோதா மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிராக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு கட்சியின் சார்பில் அதன் தலைவர்கள் முகமது அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி ஆகியோர் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு, 370-வது பிரிவை ரத்து செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், காஷ்மீர் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்றி ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பில் உள்ள நிலையில் இதுபோன்ற உத்தரவை பிறப்பித்தது சட்டவிரோதமானது என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊரடங்கு சட்டத்தை ரத்து செய்யவும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் மூலம் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும் கோரி தெக்சீன் பூனாவாலா தாக்கல் செய்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் வருகிற செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.