அபிராமம் அருகே மதுக்கடை திறக்க எதிர்ப்பு: கலெக்டர் முகாம் அலுவலகம் முற்றுகை

அபிராமம் அருகே மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் முகாம் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் உடையநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஊர் தலைவர் நாகன் தலைமையில் கலெக்டர் முகாம் அலுவலகம் வந்து முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் 250 குடியிருப்புகள் உள்ளன. எங்கள் தெரு நுழைவு வாயில் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த பகுதியில் தொடக்க பள்ளியும், வழிபாட்டு தலங்களும் உள்ளன. இதுதவிர உயர்கல்விக்கு செல்பவர்கள் இந்த வழியாகதான் செல்ல வேண்டி உள்ளது. இதற்கு முன்னர் இந்த பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடையால் பலவித பிரச்சினைகள் ஏற்பட்டது. இதன்காரணமாக நாங்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தியதன் பயனாக கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மதுக்கடையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர்.

தற்போது மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் பலவித பிரச்சினைகள் ஏற்படுவதோடு அதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு நாங்கள் வாழமுடியாத நிலை ஏற்படும். எனவே, உடனடியாக மதுக்கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும். எங்கள் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்க முயன்றால் அதனை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு கூறினர்.

கொட்டும் மழையில் கலெக்டர் முகாம் அலுவலகத்தினை முற்றுகையிட்ட தகவல் அறிந்த ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com