அந்தியூர் அருகே கண்பார்வையற்ற முதியவர் சேமித்து வைத்திருந்த ரூ.24 ஆயிரம் பழைய நோட்டுகள் அரசு மாற்றித்தர உதவுமா? என கண்ணீருடன் கோரிக்கை

அந்தியூர் அருகே கண்பார்வையற்ற முதியவர் வீட்டில் ரூ.24 ஆயிரத்துக்கு பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. அரசு அந்த பணத்தை புதிதாக மாற்றித்தர உதவுமா? என்று அவர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தியூர் அருகே கண்பார்வையற்ற முதியவர் சேமித்து வைத்திருந்த ரூ.24 ஆயிரம் பழைய நோட்டுகள் அரசு மாற்றித்தர உதவுமா? என கண்ணீருடன் கோரிக்கை
Published on

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பொதியாமூப்பனூரை சேர்ந்தவர் சோமு (வயது 58). கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பழனியம்மாள் (49). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கொரோனா காலத்திற்கு முன் இவர் பல ஊர்களுக்கு சென்று ஊதுபத்தி கற்பூரம் விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். மேலும் அரசின் முதியோர் உதவித்தொகையும் பெற்று வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.

100 நாள் வேலை மற்றும் தங்களால் முடிந்த கூலிவேலைக்கு கணவன்-மனைவி இருவரும் சென்று வந்தார்கள். தங்களுடைய உணவு தேவைக்கு போக சேமித்த 500 மற்றும் 1000 ரூபாய்களை பல ஆண்டுகளாக தன் தாயாரிடம் சோமு கொடுத்து வந்தார்.

சோமுவின் வயதான தாயாரும் அந்த பணத்தை வீட்டிலேயே பத்திரமாக சமையல் பொருட்கள் வைக்கும் டப்பாக்களில் சேர்த்து வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் தன் தாயிடம் கொடுத்த பணத்தை சோமு மறந்துவிட்டார். வயது முதிர்வின் காரணமாக அவருடைய தாயாரும் அதை மறந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக ஊரடங்கால் வருமானமின்றி தவித்த சோமு, தன் தாயாரிடம் பணம் ஏதாவது இருக்குமா? என்று கேட்டார். அவர் பணம் வைத்த இடத்தை மறந்துவிட்டதாக கூறினார். அதன்பின்னர் கணவன், மனைவி, தாய் என 3 பேரும் வீட்டில் அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார்கள். அப்போது ஒரு டப்பாவில் மகன் கொடுத்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். மொத்தம் 24 ஆயிரம் இருந்தது. அதைப்பார்த்ததும் கொரோனா காலத்தில் வாழ வழி பிறந்ததே என 3 பேரும் மகிழ்ந்தார்கள்.

பின்னர் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்க சோமு பையுடன் கடைக்கு சென்றார். கடையில் அவர் கொடுத்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்த உரிமையாளர்கள் வியப்படைந்தார்கள். இது பழைய செல்லாத நோட்டு, 4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்துவிட்டது என்று அவர்கள் சோமுவிடம் கூறியதால் அவர் ஏமாற்றுத்துடன் வீடுவந்து சேர்ந்தார்.

கண்பார்வையில்லாத போதும் ஊர் ஊராக சென்று ஊதுபத்தி விற்ற பணம் கைக்கு கிடைத்தும், பலன் இல்லாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டார். இதை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றித்திர அரசு உதவுமா? என்று அவர் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com