அவினாசி,
அவினாசியில் இருந்து அன்னூர் நோக்கி மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த மினி லாரியை திருச்சி சுப்பிரமணியபுரத்தைசேர்ந்த சகாயஜூலி (வயது40) என்பவர் ஓட்டினார். இந்த மினிலாரி அவினாசி ஆட்டையாம்பாளையத்தை அடுத்து அரசுப்பணியாளர் நகர் அருகே உள்ள ரோட்டின் வளைவில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே அன்னூரில் இருந்து அவினாசி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.இந்த லாரியை பாளையங்கோட்டையை சேர்ந்த ஹக்கீம் என்பவரது மகன் அக்பர் அலி(23) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அப்பகுதியில் லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக மினி லாரியும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் மினி லாரி ஓட்டி வந்த சகாய ஜூலி இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவினாசி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
லாரி டிரைவர் அக்பர் அலி படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் லாரியும் , மினி லாரியின் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது . இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.