

பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே புலிங்குன்னு பகுதியை சேர்ந்தவர் வாசு. இவர் சிமெண்டு சீட் கொண்டு மேற்கூரை வேயப்பட்டு இருந்த மண் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு அந்த வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக முன்கூட்டியே வாசு மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் புகுந்ததால் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த பைசல், முஸ்தபா, ஏலியாஸ், ஆபிரகாம் ஆகியோரது வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. சப்பந்தோடு பகுதியில் முன்னாள் சேரங்கோடு ஊராட்சி துணைத்தலைவர் மணிலாதேவி, பரமநாதன் ஆகியோரது வீடுகள் சேதம் அடைந்தன.
கோரஞ்சால்-சப்பந்தோடு சாலையில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள பாலம் உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. குன்னூர்-உபதலை சாலையோரத்தில் பாழடைந்த ரெயில்வே குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் நின்றிருந்த கற்பூர மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. உடனே வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால் அந்த மரம் ரெயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால், அதனை வெட்டி அகற்ற விடாமல் ஊழியர்கள் தடுத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் ரெயில்வே ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, மின்வாள் மூலம் மரம் துண்டு, துண்டாக வெட்டி அகற்றப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சாலையில் விழுந்த மரம் மாலை 4 மணிக்கு வெட்டி அகற்றப்பட்டது.
மேலும் சாலையில் விழுந்த மரத்தின் கிளை அருகிலுள்ள ரெயில்வே தண்டவாளத்திலும் விழுந்ததால், அதனை வெட்டி அகற்றும் வரை குன்னூர்- ஊட்டி இடையே மலைரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஊட்டி எச்.பி.எப். மற்றும் கோழிப்பண்ணை செல்லும் சாலையில் புதுமந்து பகுதியில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மின்வாள் கொண்டு மரங்களை வெட்டி அகற்றினர்.