சென்னை அருகே புதிய விமான நிலைய பணிகள் எப்போது தொடங்கும்? டாக்டர் ராமதாஸ் கேள்வி

சென்னை அருகே புதிய விமான நிலையம் எப்போது தொடங்கும் என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர், சென்னைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். புதிய விமான நிலையம் அமைப்பது சென்னையின் உடனடித் தேவை எனும் நிலையில் முதல்-அமைச்சரும், விமான நிலைய அதிகாரிகளும் கூறியுள்ள தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 28-ந் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக தெரிவித்தார். ஸ்ரீபெரும்புதூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தரவில்லை என்பதால் தான் அத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் அவர் கூறினார். புதிய விமான நிலையம் அமைக்கப்படாததால் அதிகரிக்கும் பயணியர் நெரிசலை சமாளிப்பதற்காகத் தான் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்படவுள்ளதாகவும் சந்திரமவுலி தெரிவித்தார்.

இது இப்படியென்றால், 2024-ம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று எந்த அடிப்படையில் முதல்-அமைச்சர் கூறுகிறார் என விளக்கம் வேண்டும். சென்னைக்கு 2-வது விமான நிலையம் என்பது அவசர, அவசியத் தேவை ஆகும். அதில் குழப்பங்கள் நிலவும் நிலையில், புதிய விமான நிலையம் வருமா.... வராதா? என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.

புதிய விமான நிலையம் வருகிறது என்றால் அது எங்கு அமையும்? அதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு விட்டதா? அப்படியானால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்? என்பதையும் முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com