சிதம்பரம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். பிளஸ்-2 வரை படித்து இருக்கும் இவர், தற்போது சிதம்பரம் அடுத்த வடமூர் கிராமத்தில் தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவர், சிதம்பரத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். அதே கடையில் உளுந்தூர்பேட்டை களமருதூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் சக்திவேல்(வயது 23) என்பவரும் வேலை பார்த்தார். இவருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு இருவரும் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென சக்திவேலை சிப்ஸ் கடை உரிமையாளர் பணியில் இருந்து நீக்கினார். இதையடுத்து அவர் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கிருந்தபடி, செல்போன் மூலம் அவர் இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது. சில நாட்களாக இவருடன் செல்போனில் பேசுவதை இளம்பெண் தவிர்த்தார்.
இதையடுத்து, அவரை நேரில் சென்று பார்த்து வர முடிவு செய்த சக்திவேல், நேற்று வடமூர் கிராமத்தில் உள்ள இளம் பெண்ணின் பாட்டி வீட்டுக்கு வந்தார். வீட்டில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். இந்த நிலையில் சக்திவேல், இளம்பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி, இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழலாம் என்று கேட்டுள்ளார்.
இதற்கு இளம்பெண் சில காரணங்களை குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்ததுடன், அவரது காதலையும் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் தான் எடுத்து வந்திருந்த கத்தியால் திடீரென, இளம்பெண்ணின் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் குத்தினார்.
அதில், அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம்பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து, இளம்பெண் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தப்பி ஓடிய சக்திவேலை தாலுகா போலீசார் மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு தலை காதலால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது இருவரும் காதலித்து வந்து திடீரென இளம்பெண் சக்திவேலின் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அவர் இதுபோன்ற வெறிச்செயலில் ஈடுபட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.