சோழவரம் அருகே காகித தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.18 கோடி பொருட்கள் எரிந்து நாசம்

பொன்னேரி அருகே தனியாருக்கு சொந்தமான காகித தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ரூ.18 கோடி மதிப்பிலான பேப்பர் மற்றும் எந்திரங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ கட்டுக்குள் வராத நிலையில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
Published on

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த சோழவரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செம்புலிவரம் கிராமத்தின் வழியாக சிறுணியம் கிராமம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான காகித தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்போது 50 சதவீத பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் தயாராகும் காகிதங்கள் இலங்கை, மலேசியா, குவைத் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு, மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. உடனே இது குறித்து தொழிற்சாலை மேலாளர் விநாயகம் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து செங்குன்றம் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

தீ கட்டுக்குள் வராத நிலையில், இன்ஸ்பெக்டர் நாகலிங்கம், பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. மேலும், இந்த தீ விபத்தில் எந்திரங்கள் மற்றும் காகிதங்கள் எரிந்து தீக்கரையானதில், ரூ.18 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலையில் தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு, இணைஇயக்குனர் பிரியா ரவிச்சந்திரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அருகே உள்ள கட்டிடங்களுக்கு தீ பரவாமல் இருக்க தீயணைப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com