

கூடலூர்,
கூடலூர் பகுதியில் காட்டுயானைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் காட்டுயானைகள் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதம் 30-ந் தேதி பந்தலூர் மேங்கோரேஞ்ச் பகுதியில் கருப்பையா என்பவர் காட்டுயானை தாக்கி பலியானார். காட்டுயானைகளின் தொடர் தாக்குதல்களால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சி புலிகள் காப்பக வனத்துக்குள் உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட நெல்லிக்கரை பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவர் தனது தோட்டத்தில் நேந்திரன் வாழைகள் பயிரிட்டுள்ளார். இன்னும் 1 மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்யும் வகையில் விளைந்து உள்ளன. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு 3 காட்டுயானைகள் அப்பகுதிக்கு வந்தது. பின்னர் உன்னிகிருஷ்ணனின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
இதுகுறித்து வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் அடர்ந்த வனம் மற்றும் இரவு நேரம் என்பதால் வனத்துறையினரால் உடனடியாக அங்கு வர முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். மேலும் காட்டுயானைகளும் அங்கிருந்து சென்றது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் விடியற்காலை 4 மணிக்கு காட்டுயானைகள் மீண்டும் அதே பகுதிக்கு வந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தன.
இதில் சுமார் 70 வாழைகள் சேதம் அடைந்தன. மேலும் விளைந்திருந்த வாழைத்தார்களையும் காட்டுயானைகள் தின்றன. இதை அறிந்த விவசாயிகள் காட்டுயானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் வேறு சில விவசாயிகளின் வாழைகளையும் காட்டுயானைகள் சேதப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுமலை வனத்துறையினரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.