காங்கேயம் அருகே, போலி ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமத்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

காங்கேயம் அருகே போலி ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமத்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காங்கேயம் அருகே, போலி ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமத்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது
Published on

காங்கேயம்,

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கி பனியன் நிறுவனங்களிலும், விசைத்தறிகளிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுடன் வங்காள தேசத்தை சேர்ந்த தொழிலாளர்களும் போலி ஆவணங்களுடன் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் பனியன் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் விவரங்களை சமர்ப்பிக்குமாறு அந்தந்த நிறுவனங்களுக்கு போலீசார் அறிவுரை கூறியுள்ளனர். அதன்படி தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்களது நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் உரியஆவணங்களை சமர்ப்பித்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்களில் போலி ஆவணங்கள் மூலம் தங்கி இருந்து வேலை பார்த்ததாக வங்காள தேசம் மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர்கள் போர்வையில் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கேயம் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் நேற்று படியூர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அரைகுறை தமிழில் முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளனர். இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரிப்கான் என்கிற ரிபான்மண்டல் (வயது 27) மற்றும் ரகாத்தான் என்கிற ரகதுல் மண்டல் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் பர்கனாஸ் மேற்கு வங்காளம் என்ற முகவரியில் ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் வைத்து இருந்தனர். அந்த ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானது என்று தெரியவந்தது. தொடர் விசாரணையில் வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேரும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்ட விரோதமாக மேற்கு வங்காளத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் அங்கு தங்கி இருந்த போது மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் என்று பணம் கொடுத்து போலி ஆதார் அட்டை மற்றும் போலி ஓட்டுனர் உரிமம் பெற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வந்து, அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக தங்கி வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் 2 பேரும் சென்னையில் உள்ள புழல் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்த சம்பவம் காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com