கண்டமனூர் அருகே, பால் விற்ற ரூ.5 லட்சத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் மோசடி - தொழிலாளிக்கு வலைவீச்சு

கண்டமனூர் அருகே பால் விற்ற ரூ.5 லட்சத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் மோசடி செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Published on

கண்டமனூர்,

கண்டமனூர் அருகே உள்ள கோவிந்த நகரத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருடைய மனைவி வேதவல்லி(வயது 55). இதே ஊரை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). தொழிலாளி. இவரிடம் வேதவல்லி தனக்கு சொந்தமான தோட்டம் மற்றும் மாட்டுத்தொழுவத்துடன் 15 கறவை மாடுகளை ஒப்படைத்து பராமரித்து வரும்படி கூறிவிட்டு கடந்த ஜனவரி மாதம் சென்னைக்கு சென்றார்.

இந்நிலையில் மீண்டும் வேதவல்லி சென்னையில் இருந்து வந்து நேற்று முன்தினம் மாட்டுத்தொழுவத்தை பார்வையிட்டார். அப்போது தொழுவத்தில் 5 கறவைமாடுகள் மட்டுமே இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த வேதவல்லி மீதியுள்ள கறவை மாடுகளை எங்கே என்றும், கடந்த 4 மாதங்களாக பால் விற்ற கணக்கு ரூ.4 லட்சத்து 99 ஆயிரம் எங்கே என்றும் கேட்டுள்ளார்.

இதற்கு வெங்கடேசன் முன்னுக்குப் பின் முரணாக 10 கறவை மாடுகள் நோய்வாய்பட்டு இறந்து விட்டதாகவும், பால் விற்ற பணத்தில் தீவனம், புண்ணாக்கு போன்றவைகளை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் 10 கறவை மாடுகளையும் அவர் விற்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே வேதவல்லி, வெங்கடேசன் மேல் சந்தேகப்பட்டு நடவடிக்கை எடுக்க போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன வெங்கடேசன் யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விட்டார்.

எனவே வெங்கடேசனின் இந்த நம்பிக்கை மோசடி குறித்து கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் வேதவல்லி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெங்கடேசனை வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com