தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளத்தை சேர்ந்தவர் பாண்டி என்ற முத்துப்பாண்டி (வயது 55). முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருடைய உறவுக்கார பெண்ணை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் கார் டிரைவரான காளிதாஸ் (27) என்பவர் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்தார். இதனால் காளிதாசை, முத்துப்பாண்டி கண்டித்து உள்ளார். இதில் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது.
கடந்த 1182017 அன்று காலையில் முத்துப்பாண்டி அந்த பகுதியில் உள்ள குடிநீர் வால்வை திறப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த காளிதாஸ், முத்துப்பாண்டியை திடீரென தாக்கினார். தொடர்ந்து அங்கு கிடந்த கல்லால் சரமாரியாக அடித்துக் கொலை செய்தார்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளிதாசை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் குற்றம் சாட்டப்பட்ட காளிதாசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சேகர் ஆஜரானார்.