கொரடாச்சேரி,
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 49 பேர் பயணம் செய்தனர். கொரடாச்சேரி அருகே உள்ள கிளரியம் கிராமத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது ஊர்குடி வாய்க்கால் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. ஆனால் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ் கவிழ்ந்து விடாமல் தடுத்து நிறுத்தினார். இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்த 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவ இடத்தின் அருகில் இருந்த வாய்க்காலில் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இந்த வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து இருந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனால் தஞ்சை- திருவாரூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்துக்குள்ளான அரசு பஸ்சை வாகனங்களை மீட்க பயன்படுத்தப்படும் ரெக்கவரி வேன் மூலம் பள்ளத்தில் இருந்து மீட்டு சமநிலைக்கு கொண்டுவந்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.