

கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது ஆவல்நத்தம் கிராமம். இங்கு மானாவாரியான விவசாயம் நடந்து வருகிறது. இங்கு பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்துக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரிசல்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த கண்மாயில் இருந்து வருடந்தோறும் விவசாயத்துக்கு தேவையான கரம்பை மண் எடுப்பதற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து அனுமதி கொடுக்கப்படும். பஞ்சாயத்து யூனியன் என்ஜினீயர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் எழுதி கொடுத்து தாலுகா அலுவலகத்தில் இருந்து நோட்டீசு கொடுக்கப்பட்டு, அந்த கண்மாயில் இருந்து கரம்பை மண் எடுப்பதற்கு 11 நாட்கள் அனுமதி கொடுக்கப்பட்டது. அதன்படி பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கண்மாய் பகுதிக்கு வந்தனர். அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை மண் அள்ளவிடாமல் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரம்பை மண் எடுப்பதாக கூறி சரள் மண் எடுப்பதையும், மேலும் ஒரே சீராக எடுக்காமல் ஆங்காங்கே தோண்டி குண்டும் குழியுமாக ஏற்படுத்தி இருப்பதையும், வரத்து கால்வாயில் மணல் போட்டு இருப்பதையும் கண்டித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் பரமசிவன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வரத்து கால்வாயில் மணலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கண்மாயில் குழிகளை மூடுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாசில்தார் தெரிவித்தார்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அவரிடம் கூறுகையில், கண்மாய் கரையோரம் பழுதடைந்துள்ள ஆழ்துளை குழாயை சரிசெய்ய வேண்டும். கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.