

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி அருகே உள்ள பூதிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 42). விவசாயி. இவரை கடந்த மாதம் 29-ந் தேதி மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்தனர். பிறகு உடலில் கல்லை கட்டி கங்கலேரி அருகே உள்ள வட்டிகானப்பள்ளி என்ற இடத்தில் விவசாய கிணற்றில் வீசி சென்றனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பூதிப்பட்டியை சேர்ந்த தாமு என்பவரின் மகன் பெருமாள் (28), கங்கலேரி அருகே உள்ள ராமர்கொட்டாயை சேர்ந்த சரவணன் (43) ஆகிய 2 பேர் சேர்ந்து ராமனை கொலை செய்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் கொலையுண்ட விவசாயி ராமனின் நண்பர்கள் ஆவார்கள். சம்பவத்தன்று ராமன் கையில் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தார். அந்த பணத்தை கொள்ளையடிக்க பெருமாளும், சரவணனும் முடிவு செய்தனர்.
இதற்காக அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். கைதானவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சம்பவத்தன்று ராமன் ரூ.50 ஆயிரம் வைத்திருந்தார். அதை கொள்ளையடிக்க நாங்கள் இருவரும் திட்டமிட்டோம். இதனால் ராமனுக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்தோம். மேலும் நாங்களும் அவருடன் சேர்ந்து மது குடித்தோம். வட்டிகானப்பள்ளி அருகே சென்ற போது மது போதையில் இருந்த ராமனை கல்லால் தாக்கி கொலை செய்தோம்.
பிறகு அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து கொண்டோம். இதன் பிறகு ராமனின் உடலில் கல்லை கட்டி அங்கிருந்த கிணற்றில் வீசி சென்றோம். பின்னர் நாங்கள் பணத்தை பிரித்துக் கொண்டோம். இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.