மஞ்சூர் அருகே, மானை வேட்டையாடிய 4 பேர் கைது - தலைமறைவான தொழிலாளிக்கு வலைவீச்சு

மஞ்சூர் அருகே மானை வேட்டையாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கூலி தொழிலாளியை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Published on

மஞ்சூர்,

மஞ்சூர் பெள்ளத்திக்கம்பை அருகே அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்தநிலையில் பெள்ளத்திக்கம்பை ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த சிலர் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின்படி உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் குந்தா வனச்சரகர் சரவணன், வனவர்கள் ரவிக்குமார், கிருஷ்ணன், ஸ்ரீராம், வனக்காப்பாளர்கள் ராமச்சந்திரன், ஜெயகணேஷ், ராமச்சந்திரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதனைதொடர்ந்து அங்குள்ள வீடுகளில் வனத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ரங்கசாமி (வயது 40), நாகேஷ் (39), ரமேஷ் (36), சரவணன் (27) ஆகியோர் மானை வேட்டையாடி அதன் இறைச்சியை சமைத்து கொண்டு இருந்தனர். இதையடுத்து, அவர்களை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் மான் இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கூலி தொழிலாளி கிருஷ்ணன் (46) என்பவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com