மசினகுடி அருகே, கடை வீதியில் சுற்றித்திரியும் ‘ரீவால்டோ' யானை - வியாபாரிகள் பீதி

மசினகுடி அருகே ‘ரீவால்டோ யானை’ கடைவீதியில் சுற்றித்திரிகிறது. இதனால் வியாபாரிகள் பீதி அடைந்து உள்ளனர்.
Published on

மசினகுடி,

மசினகுடி அருகே உள்ள மாவனல்லா வனப்பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டுயானை ஒன்று வந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் யானைக்கு துதிக்கையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அதனை கண்ட சில வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் யானையின் துதிக்கையில் ஏற்பட்டு இருந்த காயத்துக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அந்த யானை மனிதர்களுடன் சுலபமாக பழக தொடங்கியது. தொடர் மருத்துவ சிகிச்சை காரணமாக அந்த யானையின் துதிக்கையில் ஏற்பட்டு இருந்த காயம் குணமாகியது. அதனை தொடர்ந்து அந்த யானையும் மாவனல்லா, வாழைத்தோட்டம், பொக்காபுரம் ஆகிய பகுதிகளிலேயே சுற்றித்திரிந்து வருகிறது.

மனிதர்களுடன் நன்றாக பழகும் அந்த யானையை ரீவால்டோ என பெயரிட்டு அப்பகுதி மக்கள் செல்லமாக அழைத்து வருகின்றனர். சில மணி நேரம் மட்டும் வனப்பகுதிக்குள் சுற்றித்திரியும் அந்த யானை பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வருதை வழக்கமாக கொண்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மசினகுடி அருகே உள்ள மாவனல்லா பகுதியில் ரிவால்டோ யானை முகாமிட்டு உள்ளது. மனிதர்கள் விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லாத அந்த யானை, வீடு வீடாக சென்று அங்குள்ள மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் பகல் நேரங்களில் மாவனல்லா-ஊட்டி நெடுஞ்சாலைக்கு வரும் அந்த யானை வாகனங்கள் செல்ல வழி விடுவதில்லை. இதனால் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக மாலை நேரத்தில் மாவனல்லா கடைவீதியில் சுற்றித்திரிகிறது. இதனால் கடை வீதியில் உள்ள வியாபாரிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

இங்கு உள்ள கடைகளின் முன்பு வரும் ரீவால்டோ யானை, சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக யாரேனும் உணவு அளிப்பார்களா? என எதிர்பார்த்து நிற்கிறது. இது மட்டுமின்றி மாவனல்லா பகுதியில் உள்ள குப்பை தொட்டிகளுக்கு சென்று, அதில் உள்ள குப்பை கழிவுகளையும் சாப்பிட்டு வருகிறது. எனவே அந்த யானையை பிடித்து முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல புலிகள் காப்பக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com