முத்தூர் அருகே, குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசம் - மாணவன் வெளியே ஓடிவந்ததால் உயிர்தப்பினான்

முத்தூர் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது. தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த மாணவன் வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
Published on

முத்தூர்,

முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையம் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 37). லாரி டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி (30). இவர்களுக்கு கோகுல் (8) என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறான். இவர்களுடைய வீடு ஓலையால் வேயப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வேலுச்சாமி லாரி ஓட்டிக்கொண்டு தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார். பரமேஸ்வரி வழக்கம் போல் நேற்று காலை கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.

தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் மாணவன் கோகுல் மட்டும் வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்தான். இந்த நிலையில் மதியம் 2 மணிக்கு வீட்டில் தென்னங்கீற்றினால் வேயப்பட்ட ஓலை பகுதியின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் வீட்டில் இருந்த கோகுல் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டான். இதனால் அவன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினான்.

இதற்கிடையில் வீடு முழுவதும் தீ வேகமாக பரவியது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து சென்று தண்ணீரை கொண்டு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அணைக்க முடியவில்லை. இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அலுவலர்(பொறுப்பு) வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

ஆனாலும் இந்த தீ விபத்தில் வேலுச்சாமியின் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசம் ஆனது. மேலும் வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, பாத்திரங்கள், துணிகள், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை எரிந்து நாசம் ஆனது. இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் வருவாய் ஆய்வாளர் சாந்தி, சின்னமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பிரபாவதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து சென்று தீ விபத்தில் எரிந்து நாசமான வீட்டை பார்வையிட்டனர். பின்னர் வேலுச்சாமியின் குடும்பத்துக்கு இயற்கை பேரிடர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ் இலவச வேட்டி, சேலை, 10 கிலோ அரிசி மற்றும் ரூ.5 ஆயிரம் வழங்கினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com