

பேட்டை,
நெல்லையை அடுத்த பேட்டை-கருங்காடு ரோடு மைலப்பபுரத்தைச் சேர்ந்தவர் கொம்பன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 40). இவர்களுடைய மகன் பாபு. இவருக்கும், பாலா (20) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கொம்பனுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தொழில்ரீதியாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. கொம்பன் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. இதனால் அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ளார்.
நேற்று இரவில் லட்சுமி, பாலா ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று புகுந்தது. அவர்கள், லட்சுமி, பாலா ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் அவர்களுடைய கைகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அந்த கும்பல், வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றது.
கைகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த லட்சுமி, பாலா ஆகிய 2 பேருக்கும் நெல்லை தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நெல்லை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார், பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மணி, சுந்தர், அய்யப்பன் உள்பட 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.