பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை

பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாலக்கோடு அருகே பிளஸ்-2 மாணவி தீக்குளித்து தற்கொலை
Published on

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பேளாரஅள்ளி அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னமாதன். கட்டிட தொழிலாளி. இவருடைய மகள் மங்கம்மாள்(வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருந்தார். இவரை பெற்றோர் தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால் மாணவி பாலக்கோட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தான் படிப்பதாக கூறி வந்ததாக தெரிகிறது.

இதையறிந்த சின்னமாதன் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்து மகளிடம் கேட்டுள்ளார். அப்போது பாலக்கோடு அரசு கல்லூரியில் தான் படிப்பேன் என்று கூறி மாணவி வாக்குவாதம் செய்து விட்டு வீட்டுக்குள் படுக்க சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் மனைவியுடன் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழியாக புகை வந்துள்ளது.

இதையறிந்த சின்னமாதன் மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது மாணவி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டது தெரியவந்தது. வலி தாங்க முடியாமல் மாணவி வெளியே வந்த போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவியை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மாணவியை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி மங்கம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை சின்னமாதன் பாலக்கோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வலட்சுமி ஆகியோர், மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com