ராமேசுவரம் அருகே கல்லால் அடித்து ஏ.டி.எம். எந்திரங்கள் உடைப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு

கல்லால் அடித்து 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள ஒரு வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்படுகிறது. அந்த மையத்தில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பணம் எடுக்க ஒருவர் சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் எடுக்கும் 2 எந்திரங்களும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து தங்கச்சிமடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தனமாரி தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்தனர். உடைக்கப்பட்டு கிடந்த 2 எந்திரங்களையும் பார்வையிட்டனர். அப்போது தடயவியல் நிபுணர்கள் உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரங்கள் மற்றும் மையத்தின் உள்ளே கிடந்த கல்லில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.

ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்த்த போது, அதில் நள்ளிரவில் முககவசம் அணிந்த ஒருவர் கையில் பெரிய கல்லுடன் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்து, அந்த கல்லால் 2 ஏ.டி.எம் எந்திரங்களையும் அடித்து உடைத்து விட்டு, கல்லை அங்கேயே போட்டு விட்டு சென்றதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதுகுறித்து வங்கி நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப்பட்டாலும் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com